1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான 'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் நாளை 3.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
மாயாவதியில் உள்ள அத்வைத ஆசிரமத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்தியாவின் பண்டைய ஆன்மிக ஞானம் குறித்த செய்திகளை பரப்புவதற்கான முக்கிய ஊடகமாக 'பிரபுத்த பாரதா' திகழ்கிறது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்த பத்திரிகை, இரண்டு வருடங்கள் கழித்து ஆல்மோராவில் இருந்து வெளியிடப்பட்டது.
1989 ஏப்ரலில் இருந்து அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளியாகி வருகிறது.
இந்திய கலாச்சாரம், ஆன்மிகம், தத்துவம், வரலாறு, உளவியல், கலை மற்றும் இதர சமூக விஷயங்கள் குறித்து பல்வேறு தலைசிறந்த நபர்கள் 'பிரபுத்த பாரதா'-வில் எழுதி தங்களது முத்திரையை பதித்துள்ளார்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பால கங்காதர திலகர், சகோதரி நிவேதிதா, குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் 'பிரபுத்த பாரதா'-வுக்கு பங்களித்துள்ளனர்.
ஒட்டுமொத்த 'பிரபுத்த பாரதா' இதழ்களையும் தனது இணையதளத்தில் வெளியிட அத்வைத ஆசிரமம் பணியாற்றி வருகிறது.