புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகிலுள்ள இடத்தை நகரக் காவல்துறையின் சிறப்புப் பிரிவுக் குழு சனிக்கிழமை காலை பார்வையிட்டது.
புதுடெல்லியில் நேற்று மாலை வெடிபொருள் (ஐ.இ.டி) ஒன்று வெடித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
''புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை மாலை 5:05 மணிக்கு வெடிபொருள் ஒன்று வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை. கட்டிடங்களுக்கோ, பொருட்களுக்கோ சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குடியரசு தினக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக ராணுவத்தினருக்கான 'பீட்டிங் ரீட்ரீட்' எனப்படும் வண்ணமயமான விழா நடப்பது வழக்கம்.
நேற்று மாலை விஜய் சவுக் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில் ஒருசில கிலோ மீட்டர் தொலைவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி கேமரா உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
இஸ்ரேலியத் தூதரக அதிகாரி பெயரிடப்பட்டு, ஒரு குறிப்பு அடங்கிய உறை ஒன்று குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் காணப்பட்டது. வெடிகுண்டு குறித்த ஆய்வும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பகுதிகளைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.