மகாத்மா காந்தியின் லட்சியங்கள் மில்லியன் கணக்கான மக்களை வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலை வரலாற்றின் எந்தவொரு அடுக்கிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கையை வாழ்ந்தவர் காந்தி. அவர் கொண்ட கொள்கையின் உறுதியும் தனது விடாப்பிடியான அறப்போராட்டமுமே மானுடம் பேசும் கதைகளாகும்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று. நாதுராம் கோட்சே என்பவரால் 1948-ல் இதே நாளில் மகாத்மா காந்தி சுடப்பட்ட தினத்தையொட்டி ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக இன்றைய தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காந்தியின் நினைவு தினத்தில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவு வாயிலாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
"மகாத்மா காந்திக்கு அவரது நினைவு தினத்தில் அஞ்சலி. அவரது லட்சியங்கள் தொடர்ந்து மில்லியன் கணக்கான மக்களை வழிநடத்துகின்றன.
இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் ஒவ்வொரு இந்தியரின் நல்வாழ்விற்காகவும் தங்களை அர்ப்பணித்த பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரின் வீரத் தியாகங்களையும் தியாகிகள் தினத்தன்று நினைவு கூர்கிறோம்.''
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.