இந்தியா

அமைச்சர் பதவி எதிர்பார்த்த லாலு மகள் மிசா பாரதிக்கு ஏமாற்றம்: சமாதான தூது அனுப்பிய நிதிஷ்

ஆர்.ஷபிமுன்னா

லாலு பிரசாத் யாதவின் மகளான மிசா பாரதி தனக்கு பிஹார் மாநில அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதை பதவி ஏற்பிற்கு முன்தினம் இரவு கேள்விப்பட்டு கோபம் அடைந்தவரை, சமாதானம் செய்ய தூது அனுப்பினார் நிதிஷ் குமார்.

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த லாலுவுக்கு பிறந்த மூத்த மகள் மிசா பாரதி. இவரையே தனது முதல் அரசியல் வாரிசாகக் களம் இறக்க முயன்றார் லாலு. இதற்காக, மக்களவை தேர்தலில் தன் நெருங்கிய சகாவான ராம்கிருபால் யாதவிடம் இருந்து பாட்லிபுத்ரா தொகுதியைப் பறித்து மிசாவுக்கு அளித்தார். இதனால், கட்சியில் இருந்து விலகிய ராம்கிருபால், பாஜகவில் இணைந்து மிசாவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், படுதோல்வி அடைந்த மிசா மீண்டும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த லாலு, தன் இருமகன்களான தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஸ்வீ பிரசாத் யாதவ் ஆகியோரை களம் இறக்கி விட்டார்.

இதில் தன் கூட்டணி வெற்றி பெற்றால் மிசாவை அமைச்சராக்கி மேலவை உறுப்பினராக்குவதாக உறுதி அளித்திருந்ததாகக் கூறப்பட்டது. இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மிசாவுக்கு ஒருநாள் முன்னதாக நிதிஷ் குமாரின் அமைச்சரவைப் பட்டியலில் தம் பெயர் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால், கடும் கோபம் கொண்ட மிசா, தம் தந்தையான லாலுவிடம் அதன் மீது கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதை தன் குடும்பத்தாரிடம் கடும் கோபம் காட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா கட்சி நிர்வாகிகள், "ராப்ரியாலும் மிசாவை சமாளிக்க முடியாமல் இறுதியில் நிதிஷின் உதவியை நாட வேண்டி இருந்தது. இதற்கு அவர் தனது பிரச்சார வடிவமைப்பாளர் பிரஷாந்த் கிஷோரை அனுப்பி சமாதனம் செய்தார். விரைவில் மிசாவுக்கு ஏதாவது ஒரு பதவி கொடுக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பட்டம் பெற்ற மிசா பாரதிக்கு வயது 40. இவரது கணவர் சைலேஷ்குமார் கணினிப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு 12 வயதில் துர்கா பாரதி மற்றும் 6 வயதில் கௌரி பாரதி என இரு மகள்கள் உள்ளனர். மிசாவுடன் சேர்த்து லாலுவுக்கு ஏழு மகள்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காதமையால் பெரிதும் எமாற்றம் அடைந்த மிசா பாரதி, பதவி ஏற்பு விழாவிலும் மகிழ்ச்சி குறைந்து காணப்பட்டார்.

SCROLL FOR NEXT