பாரதிய கிசான் யூனியன் தலைவரான ராகேஷ் டிகைத்தின் அழுகுரலுக்கு பல அரசியல் கட்சிகள் செவிசாய்த்து ஆதரவளித் துள்ளன. இதன் பின்னணியில், உத்தரபிரதேச மேற்கு பகுதி மாவட்டங்களின் வாக்கு அரசியல் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
குடியரசு தினத்தன்று விவ சாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித் தது. இதனால், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளில் ஒரு பகுதியினர், தங்கள் நிலையிலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். இதன் தாக்கமாக, போராட்டம் நடந்து வரும் டெல்லி எல்லைகளில் ஒன்றான காஸிபூரில் இருந்து விவசாயிகள் வீடு திரும்பத் தொடங்கினர். நேற்று முன்தினம் காஸிபூர் போராட்டக் களம் பெரும்பாலும் காலியானது.
இந்நிலையில், காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் காஸிபூர் எல்லையை காலி செய்யக் கோரி பாரதிய கிசான் யூனியன் தலைவரான ராகேஷ் டிகைத்துக்கு நோட்டீஸ் அளிக்கப் பட்டது. இதனால் மிகவும் கவலையடைந்த ராகேஷ், அன்றைய தினம் இரவில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் பேசும்போது, "விவசாயிகள் வீடு திரும்ப வேண்டாம்" என குரல் தழுதழுக்க பேசினார்.
இதன் காரணமாக, ராகேஷின் சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மஹா பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில், அம்மாநில மேற்கு பகுதி மாவட்ட விவசாயிகள் பலரும் கூடி ராகேஷுக்கு ஆதரவாக காஸிபூர் சென்று போராட முடிவு எடுத்தனர். இதற்கு முன்பாக, பாஜக தவிர மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ராகேஷ் டிகைத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கினர்.
இதில், முதல் தலைவராக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் டிகைத்துக்கு ஆதரவாக பேசினார். அத்துடன் தனது துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை காஸிபூர் எல்லைக்கு விஜயம் செய்ய வைத்தார்.
இதையடுத்து, உ.பி. மாநில ஜாட் சமூக கட்சியாக கருதப்படும் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் ஜெயந்த் சவுத்ரி, மஹா பஞ்சாயத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்தார். இந்த வரிசையில், உ.பி. முன்னாள் முதல்வர்களான பகுஜன் சமாஜின் மாயாவதி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோருடன் காங்கிரஸும் ஆதரவளித்தது. இதன் பின்னணியில், உ.பி.யின் வாக்கு வங்கி அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஜாட் சமூகத்தினர்
உ.பி.யின் மேற்கு பகுதி மாவட்டங்களின் தேர்தல்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக ஜாட் சமூகத்தினர் உள்ளனர். இவர்களே அம் மாவட்டங்களின் பெரும்பாலான விவசாயிகள் ஆவர். இவர்களின் முக்கிய சங்கமான பாரதிய கிசான் யூனியன் தலைவரான ராகேஷ் டிகைத்தும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவரே.
எனவே, உ.பி.யில் ஆட்சியை இழந்த மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ் என அனைவரும் ஜாட் வாக்குகளை பெறவே அவருக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. உ.பி.யில் 2022-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.