இந்தியா

டெல்லி கலவரத்தின்போது இறந்த விவசாயி உடலில் குண்டு காயம் இல்லை- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் டிப்டிபா கிராமத்தைச் சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயி ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். ஆனால், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நவ்ரீத் சிங் இறந்ததாக வதந்தி பரவியது. இதை டெல்லி போலீஸார் மறுத்ததுடன், நவ்ரீத் சிங் வேகமாக ஓட்டிவந்த டிராக்டர் கவிழ்ந்த காட்சிகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், நவ்ரீத் சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. நவ்ரீத் சிங் தலை மற்றும் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதும், அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் ஏதுமில்லை என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி மற்றும் காயங்களில் இருந்து ஏற்பட்ட ரத்தப்போக்கே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷோகன் கவுதம்கூறும்போது, ‘‘டிராக்டர் கவிழ்ந் ததில் விவசாயிக்கு பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவேமரணத்துக்கு காரணம்’’ என்றார்.

SCROLL FOR NEXT