சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே: கோப்புப் படம். 
இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: அன்னா ஹசாரே நாளை தொடக்கம்

பிடிஐ

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நாளை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் இருக்கும் ராலேகான் சித்தி கிராமத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹசாரே நாளை தொடங்குகிறார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 11 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கும் அன்னா ஹசாரே ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு எந்தவிதமான பதிலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை.

சமீபத்தில் பிரதமர் மோடிக்குத் தனிப்பட்ட முறையில் அன்னா ஹசாரே கடிதம் எழுதியிருந்தாலும், உண்ணாவிரதப் போராட்டத்தை எப்போது தொடங்குவேன் எனத் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அன்னா ஹசாரே நேற்று வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவாருங்கள் எனக் கோரிக்கை விடுத்தேன். ஆனால், மத்திய அரசு எந்தவிதமான சரியான முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல், மத்திய அரசு இருக்கிறது. ஆதலால், நான் ஜனவரி 30-ம் தேதி முதல் என்னுடைய கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT