வரும் மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக ஆர்.எஸ்.எஸ். மாநாடு பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பாஜக, விஎச்பி, ஏபிவிபி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆர்எஸ்எஸ் தேசிய மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்கொள்ள இருக்கும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், நடவடிக்கைகள் குறித்து 10 அமர்வுகள் நடைபெற உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளில் சிறந்து விளங்கும் பிரதிநிதிகள் கருத்துரை வழங்குவார்கள்.
அதேபோல, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடு எதிர்க்கொள்ளும் தேசிய பிரச்சினைகள், வரும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆழமாக விவாதிக்கபட உள்ளது.
அப்போது நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், கர்நாடக முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் சேவகர்கள் மட்டுமல்லாமல் பாஜ, விஸ்வ இந்து பரிஷத், ஏபிவிபி, பாரதிய விவசாயிகள் சங்கம், பாரதிய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
தேசிய அளவில் 1,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.