மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: கோப்புப் படம். 
இந்தியா

அரசியல் வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவர் குடியரசுத் தலைவர்; எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அகங்காரம்: பாஜக கண்டனம்

பிடிஐ

குடியரசுத் தலைவர் அரசியல் வேறுபாடுகளைக் கடந்தவர். அவர் உரையாற்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது அகங்காரத்தின் வெளிப்பாடு என்று பாஜக கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதல் அமர்வு பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும் நடக்கும். அதன்பின் மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை 2-வது அமர்வு நடக்க உள்ளது.

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றும் போது, அதில் பங்கேற்காமல் 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “எதிர்க்கட்சிகளில் மிகப்பெரியது காங்கிரஸ் கட்சி. குடியரசுத் தலைவர் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். அவரின் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது அகங்காரத்தின் வெளிப்பாடு. அதுதான் பிரச்சினை.

மக்களின் ஆதரவு இல்லாவிட்டாலும், நாட்டை ஆள வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. நாடாளுமன்ற மரபுகளை எதிர்க்கட்சிகள் மீறிவிட்டன. காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவர் உரையை பாஜக புறக்கணித்தபோது, காங்கிரஸ் ஆட்சியின் ஊழலைக் கண்டித்தது.

மத்திய அமைச்சசர் பிரகலாத் ஜோஷி: படம் | ஏஎன்ஐ

குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த வன்முறையையும், தேசியக் கொடி அவமானப்படுத்தப்பட்டதையும் காங்கிரஸ் கண்டிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை வெளியே நடத்தட்டும். குடியரசுத் தலைவர் உரையில் பங்கேற்று அவர் உரையின் மீதான விவாதத்தில் பங்கேற்க வேண்டும். தங்களின் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். பிரச்சினை இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கலாம்.

குடியரசுத் தலைவர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், போராட்டம் முடிந்தபின் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT