சிங்கு எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தால் எங்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போராட்டக் களத்தை விவசாயிகள் காலி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25-ம் தேதி வரை விவசாயிகளின் அமைதியான போராட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ஆனால், குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை, போராட்டத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இன்று சாலைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்தப் பகுதியைக் காலி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ சிங்கு எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தால் எங்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல், டெல்லியில் குடியரசு தின டிராக்டர் பேரணியில் தேசியக் கொடியை அவமானப்படுத்தியதால் போராட்டக் களத்தைக் காலி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதனால் போராடும் விவசாயிகளுக்கும், சிங்கு எல்லை கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் திடீரென கைகலப்பில் மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இரு தரப்பிலும் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த போலீஸார் இருதரப்பினரும் சமாதானம் செய்து விலக்கிவிட முயன்றனர். ஆனால், இரு தரப்பினரும் கட்டுப்படவில்லை என்பதால், போலீஸார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இதனால் சிங்கு எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது.