மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமனக் குழு சட்டம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப் பளித்தது. இதையடுத்து, இது வரை நீதிபதிகளை தேர்வு செய்ய உள்ள ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, மூத்த வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மத்திய சட்ட அமைச்சகத்தின் உதவி யுடன் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 3,500-க்கும் மேற்பட்ட ஆலோசனைகளை கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் ஆகியோர் தொகுத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசா ரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி ஆஜரானார். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
நீதிபதிகளை நியமிக்க வரைவு திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரிக்க வேண்டும். இதில், ‘கொலீஜியம்’ குழுவுக்கு உதவும் வகையில் சுதந்திரமான தலைமைச் செயலகம் ஒன்றை உருவாக்க வேண்டும். நீதிபதிகளாக நியமிக்க பரிசீலிக்கப்படுவோர் மீது புகார்கள் இருந்தால், அதை அரசும் நீதித் துறையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும். தொழில்ரீதி யான புகாராக இருந்தால் அதை நீதித் துறை விசாரித்து உரிய முடிவுகள் எடுக்கும். நேர்மை, ஒழுக்கம் தொடர்பான புகாராக இருந்தால், அரசு விசாரித்து முடிவை தெரிவிக்கலாம். இது திறந்த முறை யிலான தேர்வு முறையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து கொண்டு நீதிபதிகளை தேர்வு செய்ய வேண்டும். இவற்றை உள்ளடக்கிய வரைவு திட்டத்தை தயாரித்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன், ‘இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால், ‘கொலீஜியம்’ முறைக்கு எதிரான புகார்களுக்கு முடிவு கட்டு வதாக அமையும்’ என்றார். பொது மக்கள் மற்றும் சட்ட நிபுணர்களி டம் இருந்து பெறப்பட்டுள்ள ஆலோ சனைகள் 15,000 பக்கங்கள் கொண்ட தொகுப்பாக திரட்டப்பட்டுள்ளது. இவற்றை படித்துப் பார்த்துவிட்டு மத்திய அரசு தனது வரைவு திட்டத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.