கரோனா தடுப்பூசிகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறோம், தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தாமதமாக தொடங்கி, முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறியதாவது:
பெரும் தொற்று சமயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். சவால்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும், இந்தியாவை தடுத்து நிறுத்த முடியாது. பேரிடர்களை கடந்து நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் போது எல்லாம் இலக்குகளை எளிதாக அடைந்துள்ளது. இந்தியா ஒன்றுபட்டு நின்று மீண்டுள்ளது.
கரோனாவை எதிர்த்து வலிமையுடன் போராடினோம். கரோனாவுக்கு எதிரான போரில் பலரது உயிர்களை காப்பாற்றியுள்ளோம். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசிகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறோம். தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.
ஊரடங்கு காலத்தில் உணவிற்காக சிரமப்படும் நிலை யாருக்கும் ஏற்படவில்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால், பலரும் பயனடைந்துள்ளனர். அனைத்து சவால்களையும் இந்தியா எதிர்த்து போராடும். ஏழைகள் நல்வாழ்வு திட்டம் மூலம் 6 மாநில மக்கள் பயனடைந்துள்ளனர்.
மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் உரிமையை அரசு மதிக்கிறது. அதேசமயம் குடியரசு தினத்தன்று நமது மூவர்ணக் கொடியின் புனிதம் அவமரியாதை செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமானது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது. வேளாண் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் கடந்த ஆண்டில் உயிரிழந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.