நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீனில் உறுப்பினர்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் இதர பணியாளர்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்கப்பட்டுவந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
ஊதியம் தவிர பல்வேறு சலுகைகளையும் எம்.பி.க்கள் அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு நாடாளுமன்ற கேன்டீனில் மிகமிகக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவதை பலரும் விமர்சித்தினர்.
இதையடுத்து, நாடாளுமன்ற கேன்டீன் உணவு மானியம் ரத்து செய்யப்பட்டு புதிய விலைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் இன்றுஜனவரி 29-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உணவுகளின் விலை முந்தைய விலையை விட வெகுவாக உயர்ந்துள்ளது.
பட்டியலில் குறைந்தபட்சமாக சப்பாத்தி ரூ.3-க்கும் அதிகபட்சமாக அசைவ பஃபெட் விருந்துரூ.700-க்கும் நிர்ணயிக்கப்பட்
டுள்ளது. சைவ பஃபெட் விருந்துரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மட்டன் பிரியாணி முன்பு ரூ.65-க்கு வழங்கப்பட்டது தற்போது ரூ.150 என உயர்த்தப்பட்டுள்ளது. வேக வைக்கப்பட்ட காய்கறிகள் ரூ.12-க்கு வழங்கப்பட்டது தற்போது ரூ.50-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ‘‘நாடாளுமன்ற கேன்டீன் உணவு மானியம் ரத்து செய்யப்பட்டதால் ஆண்டுக்கு ரூ.8 கோடி மிச்சமாகும். மேலும் நாடாளுமன்றத்துக்கு லாபமும் கிடைக்கும்’’ என்றார்.
மேலும் தற்போது கேன்டீன் கான்ட்ராக்ட் வட இந்திய ரயில்வேயிடம் இருந்து ஐடிடிசி.க்குமாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.