இந்தியா

இந்தியா - சீனா இடையிலான பிரச்சினை சர்வதேச அளவில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

செய்திப்பிரிவு

இந்தியா - சீனா இடையிலான பிரச்சினை சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தியா - சீனா இடையிலான உறவு குறித்து ஆன்லைன் மூலமான கருத்தரங்கில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது:

எல்லைக் கோட்டுப் பகுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும். அண்டை நாட்டையும் பரஸ்பரம் மதித்து நடத்தல் வேண்டும். படைக் குவிப்பு மிகவும் உணர்வு பூர்வமான நடவடிக்கை என்பதை உணர்ந்து செயல்படுவதன் மூலம்தான் ஆசிய பிராந்தியத்தில் இரு பெரும் நாடுகளும் தாங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கிய வளர்ச்சியை எட்ட முடியும்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறுவது ஏற்புடையதல்ல. எல்லையில் நடைபெறும் பிரச்சினையை வெறுமனே ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடநிகழ்வுகளில் கவனம் செலுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதனால் இரு நாடுகளுக்கு மட்டும் பாதிப்பு அல்ல. இது உலக நாடுகளுக்கும் பெரும் நெருக்குதலை ஏற்படுத்தும். கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் செயல்படும் விதம் அந்நாடுஒப்பந்தத்தை மீறிய நடவடிக்கையாகதான் பார்க்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் பதற்றமான சூழலைதான் இது உருவாக்கும். இவ்விதம் படைகள் குவிக்கப்பட்டதற்கு நியாயமான கருத்துகளை சீனா இதுநாள் வரையில் தெரிவிக்கவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் படைகளைக் குவிக்கக் கூடாது என்றஒப்பந்தம் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியை நிர்வகிப்பது என்பது பரஸ்பரம் மதித்து நடப்பதாகும். இதில் ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.

பன்முக சமூக மக்கள் அடங்கிய உலகில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள இரு பெரும் நாடுகளுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. இரு நாடுகளிடையிலான உறவில் ஏற்படும் விரிசல் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.

வளமான நாடாக வளர்வதில் அந்தந்த நாடுகளுக்கென தனித்தனி இலக்கு, லட்சியம் உள்ளது. அதை புறந்தள்ளிவிட முடியாது. இருப்பினும் எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டியதும் அவசியம். அதுதான் இரு நாடுகளிடையிலான உறவை வலுப்படுத்தும் செயலாக இருக்கும். எல்லையில் பாதிப்பு ஏற்பட்டால் அது பிற வகைகளில் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரு தரப்பு உறவில் மேம்பாடு ஏற்படும் போது கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறவு கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

SCROLL FOR NEXT