இந்தியா

அங்கன்வாடிகளில் சுத்தமான குடிநீர் வழங்க அமைச்சர் மேனகா நடவடிக்கை

ஆர்.ஷபிமுன்னா

நாடு முழுவதிலும் உள்ள அங்கன் வாடிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க மத்திய அமைச்சர் மேனகா காந்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி, தற்போது நாடு முழுவதும் 6,91,212 அங்கன்வாடிகள் உள்ளன. இவற்றில் 6,13,846 அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி உள்ளது. மீதம் உள்ள 77,366 அங்கன்வாடிகளில் இதுவரை குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை. அங்கன்வாடிகளில் சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும் என்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும் அது முறை யாக கடைபிடிக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் பல அங்கன் வாடிகளில் குழந்தைகளுக்கு அசுத்த மான குடிநீர் வழங்கப்படுவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார்கள் குவிந்துள்ளன. இப்புகார் கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “நாட்டின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு அளிப்பதில் இந்த அங்கன்வாடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் அசுத்த மான குடிநீர் வழங்குவது அரசின் குறிக்கோளுக்கு எதிரானது. இதனால், நாடு முழுவதிலும் அங்கன்வாடி களில் விநியோகிக்கப்படும் குடிநீரின் நிலை குறித்து அறிக்கை அளிக்கும் படி மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைக்கு அமைச்சர் மேனகா கடிதம் எழுதியுள்ளார்” என்றார்.

அங்கன்வாடிகளில் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள், முறைசாரா மழலையர் கல்வி, கூடுதல் ஊட்டச் சத்து ஆகியவை இலவசமாக அளிக் கப்பட வேண்டும். மேலும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் நலப் பரிசோதனை மற்றும் ஊட்டச் சத்தும் அவற்றின் தாய்களுக்கு உடல்நலக் கல்வியும் அளிக்கப்பட வேண்டும். ஆனால் பல அங்கன் வாடிகளில் இவை முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் குறிப்பாக குடிநீர் சுத்தமாக இருப் பதில்லை என்றும் புகார் வந்ததை அடுத்து மத்திய அமைச்சர் மேனகா கடந்த வாரம் தனது துறை உயரதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதம் மீதான நடவடிக்கை யாக நாகாலாந்து, மிசோராம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், டையூ டாமன், கோவா, சண்டீகர், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுக்கு ஒவ் வொரு அங்கன்வாடியிலும் வழங்கப் படும் குடிநீரில் 10 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு 25 குடிநீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது. இவற்றில் 10 மாநிலங்களுக்கு அவற்றின் மாவட்டங் களின் பெயர்களையும் குறிப்பிட்டு குடிநீர் மாதிரிகளை சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் டி.டி.எஸ் (Total Dissolved Solids), ஈகோலி, அம்மோனியா, குளோரின், புளோரைடு, நைட்ரேட், சல்பேட் உட்பட பல வேதியல் பொருட்கள் கலந்திருக்கும் அளவை ஆய்வு செய்து அனுப்பும்படி மாநில அரசுகளிடம் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT