இந்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐஎம்எப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஆற்றலை பெற்றுள்ளன என்பது உண்மை. அதே நேரத்தில் அந்த சட்டங்களால் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளுக்கு ஒரு சமூகப் பாதுகாப்பு வலையை இந்திய அரசு உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே உள்ள தரகர்கள் நீக்கப்படுவார்கள். மேலும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற நிலை வரும். இந்த சட்டங்கள் நாட்டின் விவசாய சந்தையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் சந்தைப்படுத்துதலை இது விரிவாக்குகிறது.
விவசாய மண்டிகளுக்கு விளைபொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் எங்கு வேண்டுமானாலும் கடைகளுக்கு தங்களது பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். இந்தியாவில் விவசாயத்திலும் விவசாய சந்தைப்படுத்துதலிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளது. இதுதொடர்பான விவாதம் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் முடிவு என்ன என்பதைநாம் கவனிக்க வேண்டும் என்றார்.