இந்தியா

திஹார் சிறையில் உள்ள சோட்டா ராஜன் மும்பை செல்வதற்கு தயக்கம்: சிறை அதிகாரிகள் தகவல்

பிடிஐ

டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜன், மும்பை செல்வதற்கு தயக்கம் காட்டுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லிக்கு அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி 10 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். இப்போது அதிக பாதுகாப்பு உள்ள திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அவரை அடைத்து வைத்துள்ளனர். சோட்டா ராஜன் மீது மும்பை குண்டுவெடிப்பு உட்பட 71 வழக்குகள் உள்ளன. மும்பை, டெல்லி உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சோட்டா ராஜனை மும்பை அழைத்துச் சென்று அங்குள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், மும்பை செல்வதற்கு அவர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திஹார் சிறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “திஹார் சிறையில் சோட்டா ராஜன் தகுந்த பாதுகாப்புகளுடன் உள்ளார். அதனால் அவர் மும்பை செல்ல விரும்பவில்லை” என்று நேற்று தெரிவித்தார்.

சோட்டா ராஜனுக்கு தேவையான உணவு, மருந்துகள் எல்லாம் திஹார் சிறையில் கிடைக்கிறது. அவரும் எந்த புகாரும் தெரிவிக்காமல் சிறையில் பாதுகாப்பாக இருக்கிறார். அவர் அடைக்கப்பட்டுள்ள சிறையை 12 அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் சோட்டா ராஜன் சகஜமாக பேசி வருகிறார்.

சோட்டா ராஜனின் உயிருக்கு, மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளால் ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது. அதனால், திஹார் சிறைக்கு வெளியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT