இந்தியா

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் சமாஜ்வாதி, பாஜகவுக்கு பின்னடைவு: மாயாவதி கட்சி வெற்றி

பிடிஐ

உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கும், மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் எதிர்க்கட்சியான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான 3,112 இடங்கள் மற்றும் 77,576 பிளாக் பஞ்சாயத்து உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடர்வ தால் இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை.

இதில், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட மாநில அமைச்சர்கள் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் உறவினர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வி யைத் தழுவினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் மொத்தம் உள்ள 58-ல் பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மோடி தத்தெடுத்த கிராமமான ஜெயபூரில் பாஜக வேட்பாளர் அருண் சிங்கை பகுஜன் சமாஜ் வேட்பாளர் ரமேஷ் திவாரி தோற்கடித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் லக்னோ தொகுதியில் உள்ள 28-ல் 4 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவின் தியோரா தொகுதியில் 56-ல் 49 இடங்களை பாஜக கைப்பற்றி உள்ளது.

SCROLL FOR NEXT