டாக்டர்.என்.ஹரி பாலாஜி ஐபிஎஸ், ஆர்.ராஜா ஐபிஎஸ் 
இந்தியா

நக்ஸலைட்டுகளை என்கவுன்ட்டர் செய்த தமிழர்களான மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் வீரதீரப் பதக்கம்

ஆர்.ஷபிமுன்னா

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரின் வீரதீரப் பதக்கங்கள் 946 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவின் ஐபிஎஸ் அதிகாரிகளான இரண்டு தமிழர்களுக்கும் கிடைத்துள்ளது.

வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்புச் சேவைகளுக்காக என நான்கு வகைகளில் குடியரசுத் தலைவர் விருதுகள் வருடந்தோறும் அறிவிக்கப்படுகின்றன. அனைத்து மாநிலங்களின் காவல்துறை, மத்திய பாதுகாப்பு படைகள், மத்திய உளவுத்துறை, தேசிய பேரிடர் பாதுகாப்பு படை உள்ளிட்டோருக்கும் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

இந்த வருடம் குடியரசு தலைவர் காவல் பதக்கம் (பிபிஎம்ஜி) உயிர்த் தியாகம் செய்த துணை ஆய்வாளர்களான ஜார்க்கண்ட் மாநிலக் காவல்துறையின் பனுவா ஓரன் மற்றும் சிஆர்பிஎப் படையின் மோஹன் லால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. காவல்துறை வீரதீரப் பதக்கங்கள் (பிஎம்ஜி) 205 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. பணியில் சிறந்த சேவைகளுக்கானதில் குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கங்கள் (பிபிஎம்) 89 பேருக்கும், காவல்துறை பதக்கங்களுக்காக (பிஎம்) 650 பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வீரதீரப் பதக்கங்கள், மகாராஷ்டிர மாநிலக் காவல்துறையினரில் 13 பேருக்கு பிஎம்ஜி வழங்கப்படுகிறது. இதே மாநிலக் காவல்துறையினரில் சிறந்த சேவைகளுக்கான பதக்கங்களான பிபிஎம் 4 மற்றும் பிபிஎம் 40 பேருக்கும் அளிக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிராவில் பிஎம்ஜி பதக்கம் பெற்றவர்களில் ஐபிஎஸ் அதிகாரிகளான இரண்டு தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். வீரதீரச் செயலின்போது ஆத்தூரைச் சேர்ந்த ஆர்.ராஜா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த டாக்டர்.என்.ஹரி பாலாஜி ஆகியோர் கட்சிரோலி மாவட்டக் காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர்களாக இருந்தனர்.

இந்த இருவருமே 2018இல் இருவேறு சம்பவங்களில் அப்பகுதியில் நக்ஸலைட்டுகள் வேட்டையை வெற்றிகரமாக நடத்தியவர்கள். இதில் அதிகாரி ராஜா செய்த என்கவுன்ட்டரில் மூன்று நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் நக்ஸலைட் இயக்கத்தின் முக்கியப் பதவியை வகித்தவர். சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த அதிகாரி ராஜா, கோயம்புத்தூர் சிஐடி கல்லூரியில் பயின்று விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றியவர்.

ராஜாவின் 5 வருட இப்பணியில் கடைசி 2 வருடங்கள் அமெரிக்காவில் பணியாற்றினார். அப்போது ஐபிஎஸ் பெற வேண்டி பணியை ராஜினாமா செய்தவர், 2012இல் அதைப் பெற்றவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது ராஜா அதன் பீட் மாவட்ட எஸ்.பி.யாகப் பணியாற்றுகிறார். மற்றவரான டாக்டர்.என்.ஹரி பாலாஜி மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்றபின் 2013இல் ஐபிஎஸ் ஆனவர்.

அமராவதி மாவட்ட ஊரகப்பகுதியில் எஸ்.பி.யாக இருக்கும் ஹரி பாலாஜியும் 2018இல் கட்சிரோலியில் ஒரு முக்கிய நக்ஸலைட்டை என்கவுன்ட்டர் செய்தவர். சத்தீஸ்கரின் எல்லையில் அமைந்துள்ள கட்சிரோலி, மகராஷ்டிராவில் நக்ஸலைட் நடமாட்டம் அதிகமுள்ள ஒரே மாவட்டம்.

குடியரசு தினத்திற்கு முன்பாக அறிவிக்கப்படும் இந்தப் பதக்கங்கள் பிறகு மாநில ஆளுநர்களால் வழங்கப்படுகின்றன.

கட்சிரோலியில் பெரும்பாலும் புதிதாக ஐபிஎஸ் பணிக்கு வரும் இளம் தமிழர்களையே நியமிக்கின்றனர். சுமார் நான்கு வருடங்களுக்கு முன் இதே கட்சிரோலியில் நக்ஸலைட்டுகளை என்கவுன்ட்டர் செய்த ராஜ்குமார் ஐபிஎஸ் எனும் தமிழரும் வீரதீரப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT