மக்களவையில் மதச்சார்பின்மை என்ற பதம் மீது நடந்த விவாதத்துக்குப் பதிலளித்து வெங்கய்ய நாயுடு நேற்று பேசியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் அங்கம் பெற்ற பதம் இது. அப்படியே இது தொடரும். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் இது நமது இதயத்தில் இருக்க வேண்டும். ஜாதி, மத அடிப்படையில் அரசியல் நடத்தும் போலி மதச்சார்பின்மைவாதிகள் பிறரை மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். இதை ஏற்க முடியாது. இப்போதைக்கு அரசமைப்புச் சட்டத்துக்கு அச்சுறுத்தல் இல்லை. நெருக்கடி நிலை அச்சம் தேவையில்லை. நீதிபதிகள் மாற்றப்படுவார்கள் என்று கருத வேண்டியதில்லை. அரசமைப்புச் சட்டத்தை நாம் இணைந்து வலுப்படுத்திட வேண்டும்.
ஜாதி, மதம் பெயரால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்கு அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.
போலி மதச்சார்பின்மையை நிராகரிக்க வேண்டியது அவசியம். இப்போதைய லட்சியம் வளர்ச்சியே. யாரையும் நாம் கெஞ்ச வேண்டியதில்லை.
சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி சகிப்பின்மை என்று சொல்லும் அளவுக்கு நிலைமையை ஏற்படுத்திய பாஜக, சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் பேச்சை புறந்தள்ளு வோம். அத்தகைய சக்திகளை தள்ளிவைப்போம்.
வேற்று நாடுகளில் அல்லது அண்டை நாடுகளில் நமது தேசத்தைப் பற்றி தரக்குறைவாக பேசுவது தகுந்தது ஆகாது. அண்டை நாட்டில் நமது தேசம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டித்து பேசுவார் என்று எதிர் பார்த்தேன். இருப்பினும் அத்த கைய கருத்தை அவர் ஆமோதிக் கமாட்டார் என்றே நினைக்கிறேன்.
இந்தியா-பாகிஸ்தான் உறவு சீரடைய நரேந்திர மோடியை பாகிஸ்தான் தூக்கி எறிய வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மவுனமாக இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சோனியா காந்தி, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மத்திய அரசு தடுக்கத் தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அமைச்சர் வி.கே. சிங்கின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்ட சோனியா, அதுகுறித்து பாஜக மவுனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரங்கள் தொடர் பாக மக்களவையில் பாஜக, காங்கிரஸ் தரப்புக்கு இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.