நாடுமுழுவதும் இதுவரை 16,13,667 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய மிகப்பெரும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒன்பதாம் நாளில் 5 மாநிலங்களில் 31, 000-க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
நேற்று மாலை 7:30 மணி வரை தமிழகம் (2,494), ஹரியாணா (907), கர்நாடகா (2,472), பஞ்சாப் (1,007), ராஜஸ்தான் (24,586) ஆகிய 5 மாநிலங்களில் 31,466 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாலை 6:30 மணி வரை 693 முகாம்கள் நடைபெற்றன.
நேற்று மாலை 7:30 மணி வரை இது வரை மொத்தமாக 28,613 முகாம்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,13,667) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 61,720 பயனாளிகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்.
தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களில் வெறும் 10 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கோவிட்-19 தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட 6 நாளில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகம். 10 லட்சம் தடுப்பூசி போட இங்கிலாந்துக்கு 18 நாட்களும், அமெரிக்காவுக்கு 10 நாட்களும் ஆனது.
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் தினசரி கோவிட் பாதிப்பும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தியாவில் 1,84,408 பேர் கோவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இவர்கள் 1.73 சதவீதமாகும்.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களில் 75 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.