நிதின் கட்கரி 
இந்தியா

செயற்கையாக இரும்பு விலை உயர்வு; சிந்தெடிக் பைபர் பயன்படுத்த ஆலோசனை: வர்த்தகர்களுக்கு நிதின் கட்கரி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

உருக்கு விலை செயற்கையாக உயர்த்தப்பட்டு வருகிறது. விலையை கட்டுக்குள் வைக்காவிடில் மாற்று பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மும்பையில் தொழில் குழும நிறுவன நாளில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறியதாவது:

இரும்பு, உருக்கு ஆகியவற்றின் விலைகள் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளதும், நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விலையைக் குறைக்காமல் பார்த்துக் கொள்வதும் தெரிய வந்துள்ளது. இதேபோன்ற நிலை நீடித்தால் பைபர் கூட்டு சேர்மத்தை இரும்புக்கு மாற்றாக பயன்படுத்த முடிவு செய்யப்படும்.

இதேபோல சாலை கட்டுமானப் பணிகளிலும் இத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்படும். அனைத்து இரும்பு, உருக்கு தொழிற்சாலைகளும் சொந்தமாக உருக்கு சுரங்கங்களைக் கொண்டுள்ளன. இதனால் இவற்றுக்கு இரும்புத் தாது கிடைப்பதில் எவ்வித சிரமமும் கிடையாது. ஆனால், செயற்கையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல சிமென்ட் துறையும் விலை உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இதற்கு முடிவு கட்டும் விதமாக உருக்குக்கு மாற்றாக சிந்தெடிக் பைபரை உபயோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

உருக்கு மற்றும் சிமென்ட் உற்பத்தியில் 40 சதவீத அளவுக்கு நெடுஞ்சாலை துறைதான் பயன்படுத்துகிறது. உலகின் பிற பகுதிகளில் சிந்தெடிக் பைபர் பாளங்கள் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் உருக்கின் உபயோகம் பெருமளவு குறையும்.

தற்போது நாம் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளில் உருக்கு பயன்பாட்டினால் அவை 100 ஆண்டுகள் வரை நீடித்திருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைப் போல சிந்தெடிக் பைபர் பயன்படுத்துவதால் அது 20 முதல் 30 ஆண்டுகள் வரைதான் இருக்கும்.

எனவே நீடித்து உழைக்கும் வகையிலான சிந்தெடிக் பயன்பாட்டை பொறியாளர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் சிந்தெடிக் பைபர் உபயோகம் அதிகரிக்கும் என்றார்.

SCROLL FOR NEXT