அரசின் நலத்திட்டங்களை தொழிலாளர்கள் பெற ஏதுவாக, அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவேட்டை உருவாக்குவது குறித்த அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி 2021-22-ம்நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவேட்டை உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெற முடியும் என மத்திய அரசு கருதுகிறது. குறிப்பாக தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படும் ஓய்வூதியம் மற்றும் இதர சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயனையும் அவர்கள் பெற முடியும்.
இந்த பதிவேடு உருவாக்கும் திட்டம் மத்திய தொழிலாளர் நலத்துறை இயக்குநரகத்தால் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.760கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வருங்கால வைப்பு நிதி (இபிஎப்), தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (இஎஸ்ஐசி) உறுப்பினராக இல்லாத, 16 முதல் 59 வயதுடைய சுமார் 25 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த பதிவேட்டில் சேர்க்கப்படுவர்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் அஞ்சலகங்களுடன் இணைந்த சுமார் 5 லட்சம் வர்த்தகபிரதிநிதிகள் மூலம் தொழிலாளர்கள் இந்தப் பதிவேட்டில் தங்களைஇணைத்துக் கொள்ளலாம். இந்தப்பதிவேட்டில் இடம்பெறுவோர், இஎஸ்ஐசி-யில் பதிவு செய்துகொண்டு மருத்துவ வசதிகளைப் பெற வழிவகை செய்யப்படும். இப்போதைய நிலையில், அமைப்புசார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே இஎஸ்ஐசி திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் சிக்கிய அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன் சொந்த ஊர் திரும்ப முடியாமல், சாப்பிட வழியின்றி தவித்தனர்.
அதேநேரம் இவர்கள் பற்றிய தரவுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகளால் உதவ முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இதுபோன்ற சூழலில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பதிவேட்டை உருவாக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.