இந்தியா

நாட்டின் பாதுகாப்புக்கு தகவல் பாதுகாப்பு பெரிய சவால்: ராணுவ தளபதி நரவானே கருத்து

செய்திப்பிரிவு

இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்புக்கு தகவல் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே தெரி வித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் நாட்டின் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது. இதில் காணொலிக் காட்சி மூலம் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவ ரீதியான பாதுகாப்பு என்பது மட்டுமே அல்ல. வேறு சில முக்கியமான அடிப்படை அம்சங்களும் உள்ளன. இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்புக்கு தகவல் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சவால் பொருளாதாரத்துக்கு அதிர்ச்சியை அளிப்பதோடு அரசு நிர்வாகத்தையே முடக்கும். இந்த முறைசாராத அச்சுறுத்தல்களில் இணையதள போரும் ஒன்று. கணினி சார் மற்றும் இணையவழி தாக்குதல்கள் நமது தகவல் அமைப்புக்கு அச்சுறுத்தல் மட்டுமின்றி, நாட்டின் மிக முக்கியமான தகவல்கள் கசியும் அபாயமும் உள்ளது.

இன்றைய நாட்களில் அரசு மற்றும் தனியார் துறைகளின் தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் மிகப்பெரிய இணையவழி தாக்குதல்கள் நமது பொருளாதரத்தை பாதிக்கும். நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவ பாதுகாப்பு, நிதி பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டது. ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புக்கு இவை அனைத்தும் தேவைப்படுகிறது. கரோனா தொற்று போன்றவற்றால் ஏற்படும் பொருளாதார சவால்கள், மாசு, சுற்றுச்சூழல் மாறுபாடு, போதை மருந்து கடத்தல், தீவிரவாதம் போன்ற நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்நோக்கு அணுகு முறை தேவைப்படுகிறது.

குறிப்பிட்ட இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்த ஆளில்லா விமானங்கள் எனப்படும் டிரோன் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது உலகில் அதிகரித்துள்ளது. 2019 செப்டம்பரில் சவுதி எண்ணெய் வயல்களிலும், ஆர்மினியா - அஜர்பைஜான் மோதலிலும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப் பட்டது. எதிர்காலத்தில் மோதல்கள் ஏற்பட்டால் இந்த டிரோன் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதற்கு இவை உதாரணங்களாக உள்ளன. இந்த சவால்களை எல்லாம் இந்திய ராணுவம் உணர்ந்துள்ளதோடு, தனது வலிமையை கடந்த 15-ம்தேதி நடந்த ராணுவ தின அணிவகுப்பிலும் காட்டியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசத் துக்கே இடமில்லை.

இவ்வாறு எம்.எம்.நரவானே பேசினார்.

SCROLL FOR NEXT