இந்தியா

சசிகலா உட‌ல்நிலையில் நல்ல முன்னேற்றம்: பெங்களூரு மருத்துவமனை தகவல்

இரா.வினோத்

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்கும் அளவுக்கு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கும் அவரது அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சசிகலாவுக்கு கரோனா தொற்றுடன் தீவிர நிமோனியா காய்ச்சல் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இளவரசிக்கு அறிகுறிகள் அற்ற லேசான தொற்று இருப்பதால் கரோனா வார்டில் அனுமதித்து, உரிய மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா நேற்று மாலை விடுத்த அறிக்கையில், "சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் குறைந்துள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு சீராக உள்ளது. ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. அவருக்கு தேவையான உணவை அவரே வாய் வழியாக உண்கிறார். அவராகவே எழுந்து உட்காருகிறார். ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்கிறார். சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற இளவரசியின் மகன் விவேக் முயற்சித்து வருகிறார். நாளை மறுநாள் காலையிலேயே இருவரும் விடுதலையாக இருப்பதால், உடனடியாக‌ தமிழகம் அழைத்துச் செல்லாமல் பெங்களூருவிலேயே தங்கி சிகிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT