பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா : கோப்புப்படம் 
இந்தியா

மாநிலத்தில் உள்ள 30 சதவீத சிறுபான்மையினரை திருப்திபடுத்தவே முதல்வர் மம்தா ஆர்வம் காட்டுகிறார்: விஜய் வர்க்கியா தாக்கு

பிடிஐ


மேற்கு வங்கத்தில் 30 சதவீதம் இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப் படுத்தவே முதல்வர் மம்தா பானர்ஜி ஆர்வமாக இருக்கிறார் என்று பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் 125-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் தினகர், முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது முதல்வர் மம்தா பானர்ஜி பேசவந்தபோது, பார்வையாளர் பகுதியில் இருந்த சிலர், ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர்.

இதனால், கோபப்பட்ட முதல்வர் மம்தா பானர்ஜி, அது அரசு விழா, ஒரு கட்சியின் சார்பாக நடக்கும்நிகழ்ச்சி அல்ல. இப்படி அழைப்பு அவமானப்படுத்தாதீர்கள் எனக் கூறி பேச மறுத்துவிட்டார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், பாஜக சார்பில் ஜெய் ஸ்ரீராம் என்று முழுக்கமிட்டத்தில் எந்தத் தவறும் இ்ல்லை. மம்தா பானர்ஜியின் மனநிலையைத்தான் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா இன்று ஜல்பைகுரி நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் “ ஜெய் ஸ்ரீராம் எனும் வார்த்தை ஒருவரை ஆசிர்வதிக்க, வாழ்த்துவதற்கு பயன்படுத்தும் வார்த்தை. பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு வந்ததாலும், அவர் புறப்படும்போதும் ஜெய் ஸ்ரீராம் எனும் கோஷம் ஒலித்தது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி அவமானப்படுவதற்கு என்ன இருக்கிறது

மேற்கு வங்கத்தில் வசிக்கும் 30 சதவீத சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களை திருப்திப்படுத்தவே முதல்வர் மம்தா பானர்ஜி ஆர்வமாக இருக்கிறார். மீதமுள்ள 70 சதவீத மக்களை எப்போதும் அவர் புறக்கணித்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் மே.வங்க மக்கள் மம்தாவுக்கு தகுந்த பதிலடி தருவார்கள் “ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT