கோப்புப்படம் 
இந்தியா

லடாக் மோதல்: 2 மாதங்களுக்குப்பின் இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நடத்தும் 9-வது சுற்றுப் பேச்சு தொடங்கியது

பிடிஐ


இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்குவது தொடர்பாக இந்திய, சீன ராணுவத்தின் உயர்மட்ட கமாண்டர் அளவில் நடத்தப்படும் 9-வது சுற்றுப்பேச்சு தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பேச்சின் மூலம் இரு நாட்டின் படைகளும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து விலகிச் செல்வது குறித்து பேசப்படும். கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 6-ம்தேதி 8-வது சுற்றுப் பேச்சு நடந்தது.

அதன்பின் 2 மாதங்களுக்கும் மேலாக இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே எந்தப் பேச்சும் நடக்கவில்லை. அப்போது பதற்றம் நிறைந்த பகுதியிலிருந்து இரு நாட்டு படைகளும் விலகிச் செல்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில், சீனாவின் எல்லைக் கோட்டுப்பகுதியான மால்டோ எல்லையில் இன்று காலை 10 மணி அளவில் சீன, இந்திய கமாண்டர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தியா சார்பி்ல் 14-வது படையின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பிஜிகே மேனன் தலைமையில் பேச்சு நடந்து வருகிறது.

7-வது சுற்றுப் பேச்சு கடந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நடந்தது. அப்போது, பாங்காங் ஏரியின் தெற்குக் கரையிலிருந்து இந்தியப் படைகள் திரும்பப் பெற வேண்டும் என சீன ராணும் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பதற்றமான அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இருதரப்பு வீரர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கிழக்கு லடாக்கின் மற்றும் பல்வேறு மலைப்பகுதிகளில் இந்தியா சார்பில் ஏறக்குறைய 50 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு இணையாக சீனாவும் ராணுவத்தைக் குவித்துள்ளது. இதுவரை சீன, இந்திய ராணுவ அதிகாரிகள் அளவில் பலகட்டப்பேச்சு நடந்து முடிந்தபின் எந்த உறுதியான முடிவும் எட்டவில்லை.

கடந்த மாதம் இந்தியா, சீனா தூதரகம் சார்பில் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சு நடந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

SCROLL FOR NEXT