மக்கள் பணவீக்கத்தால் அவதிப்படுகிறார்கள், ஆனால், மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரி வசூல் செய்வதில் ஆர்வமாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் இந்த வாரத்தில் தொடர்ந்து 4 வதுநாளாக உயர்த்தப்பட்டுள்ளது. 4 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதுவரையில்லாத வகையில் மும்பையில் பெட்ரோல் லி்ட்டர் ரூ.92.28 பைசாவாகவும்,டீசல் ரூ.82.66 பைசாவாகவும் இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில் “ மோடிஜி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அபரிமிதமாக அதிகரித்துள்ளார்.
அதாவது கேஸ், டீசல், பெட்ரோல், விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மக்கள் பணவீக்கத்தால், விலைவாசி உயர்வால் அவதிப்படும்போது, மோடி அரசு வரி வசூல் செய்வதில் ஆர்வமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் “ கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளி்ல கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாக இருக்கிறது, சில நாடுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், சந்தையில் சப்ளை, தேவை இடையே சமனற்ற தன்மை நிலவுகிறது. இதனால், விலைவாசி உயர்ந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.