இந்தியா

காஷ்மீரில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

செய்திப்பிரிவு

காஷ்மீரில் வைஷ்ணவதேவி கோயிலுக்கு யாத்ரீகர்களுடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த பெண் விமானி உள்ளிட்ட 7 பேரும் உயிரிழந்தனர்.

ஜம்முவில் இருந்து வடகிழக்கே 60 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற வைஷ்ணவதேவி கோயில் உள்ளது. திரிகுடா மலையில் உள்ள இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகின்றனர். கோயிலுக்கு சாலை வழியில் செல்வதற்கு பதிலாக, பக்தர்கள் தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்று வருவதும் வழக்கம்.

இந்நிலையில் நேற்று மதியம், 2 பெண்கள் உள்ளிட்ட 6 யாத்ரீகர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்த பின், கோயிலுக்கு அருகில் உள்ள சஞ்சிசாட் ஹெலிபேடில் இருந்து கட்ரா நகருக்கு தனியார் ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ‘ஹிமாலயன் ஹெலி சர்வீசஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டரை சுனிதா விஜயன் என்ற பெண் விமானி இயக்கினார்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றி விழுந்து நொறுங்கியது. இதில் விமானி உள்ளிட்ட 7 பேரும் உயிரிழந்தனர்.

பயணிகள் 6 பேரும் அர்ஜுன், மகேஷ்வர், வந்திதா, அம்ரித்பால் சிங், சச்சின், ஆஷிமா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஜம்முவையும் மற்றவர்கள் டெல்லியையும் சேர்ந்தவர்கள் என்று கூறப்படு கிறது.

விபத்துக்கு பனிமூட்டம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜம்முவில் பனிமூட்டம் காரணமாக நேற்று பல விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.

தொழில்நுட்பக் கோளாறுக்கான வாய்ப்பு குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT