பி.எஸ்.எடியூரப்பா | கோப்புப் படம். 
இந்தியா

சிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலி; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடியூரப்பா தகவல்

பிடிஐ

சிவமூகா வெடி விபத்தில் 5 பேர் பலியாகக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிவமூகாவில் நேற்று முன்தினம் (ஜனவரி 21) இரவு 10 மணிக்குச் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென வெடித்ததில் 5 பேர் பலியாகினர். இவ்விபத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த 15 பேர் பலியானதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருகிலிருந்த கல்குவாரிக்குப் பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் ஏற்றிச்சென்றபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிவிபத்து காரணமாக பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ .5 லட்சம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்மங்களூர், தேவாங்கிரி மாவட்டங்களிலும் நில அதிர்வை ஏற்படுத்திய இந்த பயங்கர சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்பாக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சிவமூகா அருகே சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெடிவிபத்து நடந்த இடத்தில் ஸ்பாட் ஆய்வு மேற்கொள்ள அப்பகுதிக்கு நேரில் செல்கிறேன்.

சிவமூகா பகுதியின் மாவட்ட துணை ஆணையர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுரங்க அமைச்சர் ஏற்கனவே சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து நான் விஷயங்களை அறிந்துகொள்வேன். சட்டவிரோத குவாரி அல்லது சுரங்கத்தை நிறுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு என்ன காரணம் என ஆராயப்பட்டு வருகிறது. ஒரு லாரியில் அபாயகரமான வெடிக்கும் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதித்தவர் யார் என்பது குறித்து விரிவாக விசாரிக்கப்படும். இதற்குக் காரணமானவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் எந்தக் காரணத்திற்காகவும் சட்டவிரோத குவாரி அல்லது சுரங்கத்தை நான் அனுமதிக்க மாட்டேன்.

குவாரி அல்லது சுரங்கம் நடத்த விரும்புவோர் அதற்கான உரிமத்தைப் பெற வேண்டும். சட்டவிரோதமாக சுரங்கத்தைத் தோண்டுவது இதுபோன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கும். இதைக் கருத்தில் கொண்டு கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் துணை ஆணையர்களுக்கு அறிவுறுத்துவேன்''.

இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT