இமாச்சல பிரதேசத்தில் மாடுகளை கடத்திச் சென்றதாக 5 பேரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இமாச்சல பிரதேசம் சிரமவுர் என்ற ஊரில் இருந்து லாரி நிறைய மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்டது. அப்போது லாரியை வழிமறித்த சில கும்பல் மாடுகளை கொண்டு சென்ற 5 பேரையும் தாக்கியது. இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நோமன்(28) என்பவர் கொல்லப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்ற ஊருக்கு அந்த லாரி சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடத்தல் வழக்கில் மற்ற 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பதற்றமான சூழல்:
கொல்லப்பட்ட நோமனின் சொந்த ஊரான பெஹாத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நோமன் ஒரு தினக் கூலி என்றும் பஜ்ரங் தள உறுப்பினர்கள் நோமனை அநியாயமாக அடித்துக் கொன்றிருப்பதாகவும் நோமனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நோமன் உறவினரான இம்ரான் அஸ்கர் என்பவர் 'தி இந்து' (அங்கிலம்) செய்தியாளரிடம் தொலைபேசியில் கூறும்போது, "நோமன் அப்பாவி. அவரை பஜ்ரங் தள அமைப்பினர் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர். மனிதர்களை நீங்கள் இவ்வாறு கொல்லக் கூடாது. இதற்கு யார் அனுமதி அளித்தது. இந்த நாட்டுக்கு என்னதான் ஏற்பட்டுவிட்டது? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், நோமனை அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொன்றதாக இமாச்சல பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நோமன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் மாடுகள் லாரியில் முறைகேடாக கொண்டுசெல்லப்பட்டனவா எனவும் விசாரணை நடந்து வருகிறது.