இந்தியா

21 நாட்களில் 67,000 பேர் குணமடைந்துள்ளனர்; இந்தியாவில் மார்ச்சில் கரோனா முடிவுக்கு வரும்: மத்திய சுகாதார துறை நிபுணர்கள் நம்பிக்கை

செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 21 நாட்களில் மட்டும் கரோனா வைரஸில் இருந்து 67,000 பேர் குணமடைந்துள்ளனர். இதேநிலை நீடித்தால் வரும் மார்ச் இறுதிக்குள் வைரஸ் அச்சுறுத்தல் நீங்கி இயல்பு நிலை திரும்பும் என்று மத்திய சுகாதார துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கேரளாவை தவிர்த்து இதர மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி தொற்று 1,000-க்கும் குறைவாகவே உள்ளது.

நாடு முழுவதும் நேற்று 14,545 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து 1,06,25,428 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,02,83,708 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 18,002 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் 1,88,688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 163 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,53,032 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 21 நாட்களில் கரோனா வைரஸில் இருந்து 67,000 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 15,000 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. சுமார் 18,000 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இதன்மூலம் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 3,184 ஆக குறைந்து வருகிறது.

இதேநிலை நீடித்தால் அடுத்த 58 நாட்களில், அதாவது மார்ச் இறுதியில் நாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கி இயல்பு நிலை திரும்பும். கேரளாவில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த மாநிலத்துக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 6,753 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 8.77 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,03,094 பேர் குணமடைந்துள்ளனர். 70,395 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 46,836 நோயாளிகள் உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 7,717 பேரும், கர்நாடகாவில் 7,573 பேரும், மேற்குவங்கத்தில் 6,565 பேரும், சத்தீஸ்கரில் 5,638 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

SCROLL FOR NEXT