கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்லப்படும் சசிகலா. 
இந்தியா

பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி மறுப்பு; கரோனா தொற்றால் சசிகலாவுக்கு நிமோனியா பாதிப்பு: தொடர் சிகிச்சையால் உடல்நிலையில் முன்னேற்றம் என தகவல்

இரா.வினோத்

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி யுள்ள சசிகலாவுக்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை தனியார் மருத்துவ மனைக்கு மாற்ற அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. சசிகலாவின் உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். கடந்த புதன்கிழமை அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்படாதது குறித்து உறவினர்கள் கேள்வி எழுப்பியதால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார். அங்கு சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா பரிசோதனை மேற் கொண் டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சசிகலா கரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்ததில் நுரையீரலில் லேசான தொற்றும் நிமோனியா காய்ச்சலும் இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவர்கள் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா உள்ளிட்டவற்றுக்கான இன்சுலின், ஹெபரின் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை வழங்கினர்.

இதனிடையே, சசிகலாவின் உற வினர்கள் டிடிவி தினகரன், விவேக் ஆகியோர் அவரை விக்டோரியா மருத்துவமனையில் இருந்து மணிபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர். அதற்கு சிறைத்துறை நிர்வாகம் மறுத்துவிட்டது. சசிகலா இன்னும் கைதியாக இருப்பதால் அவரது மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும். ஒருவேளை உறவினர் கள் அதனை ஏற்றாலும் அரசு மருத் துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனு மதிக்க முடியும். இல்லாவிடில் நீதி மன்றம் மூலமாக நீங்கள் அனுமதி பெற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப் பட்டது.

இதனிடையே, விக்டோரியா மருத் துவமனை நிர்வாகம், ‘‘கரோனா நோயாளிக்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் இங்கு உள் ளது. இந்த நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறு எங் களால் பரிந்துரைக்க முடியாது. அவ்வாறு நாங்கள் பரிந்துரைத்தால் நீதிமன்றம், எதற்காக பரிந்துரைத் தீர்கள் என‌ கேள்வி எழுப்பும்'' என தெரிவித்ததுடன், வேறு மருத் துவமனைக்கு மாற்ற ஒப்புதல் அளிக்கவும் மறுத்துவிட்டது.

இதையடுத்து, விக்டோரியா மருத்துவமனையின் டீன் ஜெயந்தி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணாவை சந்தித்த விவேக் உள்ளிட்ட உறவினர்கள் சசிகலாவுக்கு தேவையான சிகிச்சைகளை உரிய முறையில் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் விக்டோரியா மருத் துவமனை நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், '' சசிகலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு சீராக உள்ளது. அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 98 ஆக அதிகரித்துள்ளது''என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இளவரசிக்கு கரோனா பரிசோதனை

சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவரது மகன் விவேக் சிறைத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இளவரசிக்கு நேற்று ஆன்டிஜன் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அவருக்கு சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள சிறைத் துறை முடிவெடுத்துள்ளது.

SCROLL FOR NEXT