இந்தியா

7-வது நாளில் 2.2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை 12.7 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டது

ஏஎன்ஐ

கரோனாவுக்கு எதிரான போரில், 7-வது நாளான இன்று இந்தியாவில் 2.2 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி பெற்றனர். நாடு முழுவதும் இதுவரை 12 லட்சத்து 72 ஆயிரத்து 97 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு தடுப்பூசிகள் மூலம் உலக நாடுகள் சவால்விடத் தொடங்கியுள்ளன.

இந்தியாவில் கடந்த 16-ம் தேதி (ஜனவரி 16) கரோனா தடுப்பூசி வழங்கும் முதற்கட்டப் பணி தொடங்கியது. பிரதமர் மோடி இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பாரத் பயோடெக் நிறுவனத் தயாரிப்பான கோவேக்சின், சீரம் இன்ஸ்டிட்டியூட்டின் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 7-வது நாளான இன்று (ஜன. 22) மாலை 6 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 6230 இடங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 563 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்றைய தினம், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் நாடு முழுவதும் 267 பேருக்கு சிறு உபாதைகள் தோன்றியது. நாடு முழுவதும் இதுவரை, மொத்தம் 12 லட்சத்து 72 ஆயிரத்து 97 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 14,545 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18,002 பேர் கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 163 பேர் கரோனா சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,25,428. இவர்களில் 1,88,688 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 1,02,83,708 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 032.

கரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கையை ஏற்படுத்த நாடு முழுவதும் ஆங்காங்கே தன்னார்வலர்களும், சமூக நல ஆர்வலர்களும், மருத்துவர்களும், அமைச்சர்களும், அதிகாரிகளும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT