அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்கி கடந்த 2016-ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனதொடரப்பட்ட வழக்கில், ஆதார் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் 2018-ல் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 11-ம் தேதிஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இதன் தீர்ப்பு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இதன்படி 4:1 என்ற பெரும்பான்மை முடிவின்படி இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
5 நீதிபதிகள் கொண்ட இந்தஅமர்வில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய் ஆகியோர் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்வதற்கு ஆதரவாக முடிவு எடுத்தனர். நீதிபதி சந்திரசூட் மட்டும் மாறுபட்ட முடிவு எடுத்தார். அவர், “ஆதார் மசோதா, பண மசோதா தானா என மற்றொரு வழக்கில் அரசியல் சாசனஅமர்வு சந்தேகம் எழுப்பி இருப்பதால் விரிவான அமர்வு அதனை விசாரிக்க வேண்டும். பண மசோதாஎன ஆதார் மசோதா சான்றளிக்கப்பட்டது செல்லுபடியாகுமா என்பதில் முடிவு எடுக்கப்படும் வரைமறுஆய்வு மனுக்களை நிலுவையில் வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எனினும் 4 நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில், “மறு ஆய்வு மனுக்களையும் அதற்கு ஆதரவாக வைக்கப்பட்ட கருத்துகளையும் ஆராய்ந்தோம். 2018, செப்டம்பர் 26-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை என நாங்கள் கருதுகிறோம். சட்டத்தில் ஏற்பட்ட மாற்றமோ அல்லது மற்றொரு அரசியல் சாசன அமர்வு பின்னாளில் எடுத்த முடிவோ, ஒரு தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது. இதன் அடிப்படையில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று கூறியுள்ளனர்.