மத்திய உளவுத் துறையின் அறிக்கை உள்நோக்கம் கொண்டது என்று கிரீன்பீஸ் தொண்டு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
“அரசு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டிவிட இந்திய தொண்டு அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி செய்யப்படுகிறது.
குறிப்பாக நிலக்கரி சுரங்க திட்டங்களுக்கு எதிராக கிரீன்பீஸ் போன்ற அமைப்புகள் வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்று இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன” என்று மத்திய உளவுத் துறை அண்மையில் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதற்கு கிரீன்பீஸ் தொண்டு நிறுவனம் அப்போதே மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் உளவுத் துறை புதிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக கிரீன்பீஸ் அமைப்பின் செயல் இயக்குநர் சமித் ஆயிச் கூறியதாவது:
சுற்றுச்சூழலைக் காக்க கிரீன்பீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களது போராட்டங்களால் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே எங்களை குறிவைத்து உள்நோக்கத்துடன் உளவுத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கு அஞ்சமாட்டோம். சுற்றுச்சூழலைக் காக்கும் எங்களது போராட்டங்கள் தொடரும்.
வேளாண்மை மற்றும் எரிசக்தித் துறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். அடக்குமுறை ஒருபோதும் வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிதி பெற மத்திய அரசின் அனுமதி அவசியம்
குறிப்பிட்ட இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கிரீன்பீஸ் அமைப்பு நிதியுதவி பெற மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரீன்பீஸ் இன்டர்நேஷனல், கிளைமேட் வொர்க்ஸ் பவுண்டேசன் ஆகிய வெளிநாட்டு அமைப்புகள் சார்பில் கிரீன்பீஸ் அமைப்புக்கு பெருமளவில் நிதியுதவி செய்யப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் உளவுத் துறை பரிந்துரைத்தது.
அதன்பேரில் குறிப்பிட்ட 2 நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெற மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முன்அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து கிரீன்பீஸ் அமைப்புக்கு நிதிப் பரிமாற்றம் நடைபெற்றால் அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.