*
உ.பி.யில் பசுவதை வதந்தியால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
டெல்லியில் இருந்து 56 கி.மீ. தொலைவில் பிசோதா என்ற கிராமம், உ.பி.யின் கவுதம புத்தர் மாவட்டம், தாத்ரி தாலுகாவில் அமைந்துள்ளது. இங்கு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகம்மது இக்லாக் (58) என்பவர் உண்டு வருவதாக கடந்த திங்கள்கிழமை இரவு வதந்தி பரவியது. இதைதொடர்ந்து ஒரு கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது தாய் அஸ்கரி (70), மனைவி இக்ராமன் (52), இளைய மகன் தானிஷ் (21), மகள் ஷாஹிஸ்தா (16) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த தானிஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் மேலும் கூறும்போது, "முகம்மது இக்லாக் கொல்லப்பட்ட சம்பவத்தில் விஷால் ராணா, சிவம் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயதுக்குட்பட்ட இவர்களை 5 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளோம். முக்கிய சதிகாரர்களில் விஷாலும் ஒருவர் என சந்தேகிக்கிறோம். இக்லாக் குடும்பம் தாக்கப்படும் முன், வன்முறை கும்பலின் கூட்டத்துக்கு விஷால் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. குற்றவாளிகளின் குடும்பத்தினர் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்" என்றனர்.
முஸ்லிம் தலைவர் அசாதுதின் ஒவைஸி, தொகுதி எம்.பி.யும் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சருமான மகேஷ் ஷர்மா ஆகியோர் நேற்று முன்தினம் பிசோதா கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் மகேஷ் ஷர்மா கூறும்போது, "இந்த சம்பவம் தவறான புரிதல் காரணமாக நடந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். இதை தற்செயலாக நடந்ததாகக் கருத வேண்டுமே தவிர, இதற்கு எவ்வித மதச் சாயமும் பூசக்கூடாது" என்றார்.
ராகுல் ஆறுதல்
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிசோதா சென்று, இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கிராம மக்களிடமும் அவர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இக்லாக் குடும்பத்தினரை ராகுல் சந்திக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. "பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும். தாத்ரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
கேஜ்ரிவால் நேரில் ஆறுதல்
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று பிசோதா கிராமத்துக்கு சென்றார். அவரை போலீஸார் தடுத்தி நிறுத்தி, அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத் தில் தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். இந்நிலையில் கேஜ்ரிவாலின் பாதுகாப்பு கருதியே அவர் தடுத்து நிறுத்தப் பட்டதாக கூறிய போலீஸார், பின்னர் அவர் பிசோதா கிராமத் துக்கு செல்ல அனுமதிஅளித்தனர்.
இக்லாக் குடும்பத்தினரை சந்தித்த பின் கேஜ்ரிவால் கூறும்போது, "தாத்ரி சம்பவம் மனிதநேயத்துக்கு எதிரானது. இது முற்றிலும் தவறு. இதனால் இந்துக்களோ முஸ்லிம்களோ பலன் அடையப் போவதில்லை. அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மட்டுமே பலனடைவார்கள்" என்றார்.
ஒவைஸி குற்றச்சாட்டு
முஸ்லிம் தலைவர் ஒவைஸி கூறும்போது, "இக்லாக்கின் குடும்பத்தினர் தாக்கப்பட்டதற்கு வதந்தி காரணம் அல்ல. இது மத அடிப்படைவாத தாக்குதல். குற்றவாளிகளை கைது செய்வதை விடுத்து சமாஜ்வாதி அரசோ இக்லாக் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறைச்சியை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அவர்கள் மூளை முழுவதும் விஷம் பரவியுள்ளது. அதை முதலில் சோதனை செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளி கள் போல் நடத்தப்படுகின்றனர். இந்த திட்டமிட்ட படுகொலை குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.