மம்தா பானர்ஜி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது நியாயமில்லை. நந்திகிராமில் நிச்சயமாக நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவைத் தோற்கடிப்பேன் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்களன்று, நந்திகிராமில் இருந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததற்குப் பதிலடியாக சுவேந்து அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திங்களன்று மம்தா பானர்ஜி கூறுகையில் "முடிந்தால், நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் இருந்தும் போட்டியிடுவேன். நந்திகிராம் என் மூத்த சகோதரி. பவானிபூர் என் தங்கை. ஒருவேளை நான் அங்கு போட்டியிடாவிட்டால், பவானிபூரிலிருந்து ஒரு வலுவான வேட்பாளரையும் தருவேன்" என்று தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவி வகித்த சுவேந்து அதிகாரி அதிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
மேற்கு வங்கத்தின் புர்பா மிட்னாபூரில் உள்ள கெஜூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:
''மம்தா பானர்ஜி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது நியாயமில்லை. தீதி, நீங்கள் நந்திகிராம் என்ற ஒரே ஒரு இடத்திலிருந்துதான் போட்டியிட வேண்டும். நீங்கள் இரண்டு இடங்களிலிருந்து போட்டியிட முடியாது. அது நடக்கப்போவதில்லை.
நான் நந்திகிராம் தொகுதியில் இருந்து மட்டும்தான் போட்டியிடுவேன். வேறெந்த தொகுதியிலும் நான் போட்டியிடப் போவதில்லை. நந்திகிராமில் நிச்சயமாக நான் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவைத் தோற்கடிப்பேன்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகிய இரண்டு நபர்களால் நடத்தப்படும் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி போன்று நடத்தப்பட்டு வருகிறது. அதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
பாஜக தொண்டர்கள் தொடர்ந்து திரிணமூல் தொண்டர்களால் தாக்கப்படுகிறார்கள். இன்று காலை அவர்கள் ஐந்து இடங்களில் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
இப்பிரச்சினைகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. காரணம் அவர்கள் புருலியாவுக்கு முதல்வர் வருகைக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள்''.
இவ்வாறு சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.