நாடாளுமன்ற கேண்டீனில் எம்.பி.க்களுக்கும், பிற ஊழியர்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்குவது நிறுத்தப்பட்டு, சந்தை விலைக்கே உணவுகள் வழங்கப்பட உள்ளன என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குதல் நிறுத்தப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு மத்திய அரசுக்கு ரூ.8 கோடி சேமிக்கப்படும். ஆண்டுதோறும் உணவுக்கு மட்டும் ரூ.20 கோடி செலவு செய்யப்பட்ட நிலையில் அது குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள், பிற ஊழியர்களுக்கு உணவு வழங்க 3 கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்தில் ஒரு கேண்டீனும், நூலகம் மற்றும் இணைப்புக் கட்டிடத்தில் தலா ஒரு கேண்டீனும் செயல்பட்டு வருகின்றன. இந்த கேண்டீன்களை வடக்கு ரயில்வேக்கு உட்பட்ட இந்தியச் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் நிர்வகித்து வருகிறது.
இந்த கேண்டீன்களில் வழங்கப்படும் உணவுகள் எம்.பி.க்களுக்கும், பிற ஊழியர்களுக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்தது. அதாவது சந்தை விலையிலிருந்து மூன்றில் ஒருபங்கு விலை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து மானியம் நிறுத்தப்பட்டு, சந்தை விலையிலிருந்து சற்று குறைவாக உணவுகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. விலை நிர்ணயிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வரும 29-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நாடாளுமன்ற கேண்டீன்களில் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவு நிறுத்தப்படுகிறது. இனிமேல் சந்தையில் விற்கப்படும் விலையிலேயே உணவுகள் கேண்டீனில் விற்கப்படும். ஆண்டுக்கு உணவுக்கு மட்டும் ரூ.20 கோடி செலவிடப்படுகிறது.
இந்தச் செலவில் 2 பங்கை மக்களவையும், ஒரு பகுதியை மாநிலங்களவையும் ஏற்கிறது. சந்தை விலையில் உணவுகளை விற்பனை செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 கோடி மத்திய அரசுக்கு சேமிப்பாகும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுகளுக்கான விலையை எந்த அளவு உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இந்த முடிவால் இனிமேல் உணவு வீணடிப்பது தடுக்கப்படும், உணவுகள் மேலும் தரமாகத் தரப்படும்.
நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து கொண்டபின்புதான் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்திலேயே ஆர்சிபிசிஆர் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 27-ம் தேதி முதலே எம்.பி.க்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம்''.
இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதற்கிடையே நாடாளுமன்ற கேண்டீனில் வழக்கம்போல் தேநீர் விலை ரூ.5 அளவில்தான் இருக்கும். ஆனால், காபியின் விலை ரூ.10 ஆகவும், லெமன் டீ, ரூ.14 ஆகவும் விலை உயரலாம் எனத் தெரிகிறது.
அசைவ உணவுகள் தற்போது ரூ.60க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இனி ரூ.100 ஆக விலை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.