கர்நாடக தமிழக எல்லையில் உள்ள தாளவாடியில் தமிழ் பெயர் பலகைகளை அகற்றிய வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமம் தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இந்த கிராமத்தை கர்நாடகாவுடன் இணைக்கக்கோரி கன்னட அமைப்பினர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் இரு மாநில எல்லையில் தாளவாடியை கர்நாடகாவில் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர் தேசிய நெடுஞ்சாலையில் ராமபுரம் என்ற இடத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழ் வரவேற்பு பலகையை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நடப்பட்டிருந்த தமிழ் பெயர் பலகைகளை அகற்றி, தமிழ் எழுத்துக்களை அழித்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்அமைப்பினரும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமபுரம், தாளவாடி உள்ளிட்ட எல்லையோர கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே தாளவாடி போலீஸார் தமிழ் பெயர் பலகைகளை அகற்றி தமிழக அரசின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 20 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். மேலும் இவ்வழக்கை கர்நாடக மாநில எல்லைக்குட்பட்ட சாம்ராஜ்நகர் மாவட்ட போலீஸாருக்கு மாற்ற முடிவெடுத்துள்ளனர்.