அமேசான் ஓடிடி இணையதளத்தின் ‘தாண்டவ்’ இந்தி தொடர் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் மீது வழக்குப் பதிவு செய்த உத்தரப் பிரதேசக் காவல்துறை நடவடிக்கைக்கு மும்பை விரைந்துள்ளது.
கடந்த ஜனவரி 16 முதல் அமேசானின் ஓடிடி இணையதளத்தில் ‘தாண்டவ்’ எனும் பெயரில் இந்தி தொடர் வெளியாகி வருகிறது. 22 நிமிடங்களிலான அதன் முதல் தொடரின் ஒரு காட்சியில் கல்லூரி மாணவராக வரும் நடிகர் முகம்மது ஜிஷான் அயூப், நாடக மேடையில் நடிக்கும் காட்சி வருகிறது.
இதில் நவீன உடைகள் அணிந்தபடி இந்துக்களின் கடவுள்களான ராமர் மற்றும் சிவனை அவமதிக்கும் வகையில் நடித்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இவரது வசனங்களும் இந்துக்களைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இக்காட்சி மீதான கடுமையான விமர்சனங்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது. மிகவும் வைரலாகிவிட்ட இந்தப் பதிவுகள் மீது உ.பி.யின் தலைநகரான லக்னோவின் ஹாசரிபாக் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் செய்யப்பட்டுள்ளது.
ஷியாம் பாபு சுக்லா என்பவரின் புகார் மீது தாண்டவ் தொடரில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இதில், நிகழ்ச்சியின் தலைவர் அப்னா புரோஹித், தொடரின் இயக்குநரான அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா, வசனகர்த்தாவான கவுரவ் சோலங்கி உள்ளிட்ட ஐவர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வழக்கை நேரில் சென்று விசாரிக்க ஹசாரிபாக் காவல் நிலைய ஆய்வாளர் அனில் சிங் தலைமையில் காவல் படை இன்று மும்பை விரைந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபலங்களான சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்த இத்தொடரினால், இரு பிரிவுகள் இடையே மோதல் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பெண்களை இழிவுபடுத்தியுள்ளதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமரைப் போலவும் ஒரு கதாபாத்திரம் சில காட்சிகளில் வருகிறது. இதுவும் அப்பதவிக்கு இழுக்கு ஏற்படும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்திலும் எதிர்ப்பு
இதனிடையே, 'தாண்டவ்' தொடர் மீதான சர்ச்சை பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் எழுந்துள்ளது. இங்குள்ள போபாலில் அத்தொடரின் விளம்பரச் சுவரொட்டிகளைப் பொது இடங்களில் தீயிட்டு எரித்த இந்துத்துவாவினர் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.
இதன் மீது ம.பி. மாநில சுகாதார நலத்துறை அமைச்சரான விஸ்வாஸ் சாரங் மத்திய அரசிடம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அனுப்பிய அக்கடிதத்தில் 'தாண்டவ்' தொடரைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மன்னிப்பு கோரும் அமேசான்
இந்நிலையில், எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்த அத்தொடரின் குழு மற்றும் அமேசான் நிர்வாகம், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஒரு அறிக்கையும் வெளியிட்டனர்.
அதில், “இத்தொடரின் மூலம் எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. ஒரு கற்பனைக் கதையின் அடிப்படையில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. இதன் சில பாத்திரங்கள் தற்செயலாக அமைந்தவையே தவிர உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டது அல்ல. இதன் மூலம், எந்த ஒரு மதம், சமூகம், சமுதாயம், அமைப்புகள், அரசியல்வாதிகள், உயிருடன் உள்ள அல்லது இறந்த தனி நபர்கள் உள்ளிட்டோரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவசேனா-பாஜக இடையே மோதல்
எனினும், இப்பிரச்சினையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவில் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புதிய புகார் கிளம்பியுள்ளது. இதன் மூலம், உத்தரப் பிரதேச மற்றும் மகராஷ்டிரா அரசுகளுக்கு இடையே அரசியல் மோதலும் தொடங்கியுள்ளது.