உத்தரப் பிரதேசம், மொராதாபாத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர் மறுநாளே திடீரென உயிரிழந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த ஊழியருக்கு நடந்த உடற்கூறு ஆய்வில், அவருக்கு இதயநோய் இருந்தது தெரியவந்துள்ளது என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை கடந்த 2 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மொராபாத்தில் உள்ள தீனதயால் உபாத்யா அரசு மருத்துவமனையில் வார்டு உதவியாளராக இருந்தவர் மகிபால் சிங் (வயது 46). கரோனா தடுப்பூசி கடந்த 16-ம் தேதி போட்டுக்கொண்ட நிலையில் நேற்று திடீரென மகிபால் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மொராதாபாத் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கார்க் கூறுகையில், “கடந்த 16-ம் தேதி பிற்பகலில் மகிபால்சிங் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 17-ம் தேதி (நேற்று) பிற்பகலில் தனக்கு லேசான நெஞ்சுவலி ஏற்படுவதாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுவந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகிபால் சிங்கிற்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில் அவர் இதயக் கோளாறால் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
கரோனா தடுப்பூசிக்கும், மகிபால் உயிரிழப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. கரோனா தடுப்பூசி போடப்பட்ட பின் மருத்துவ ஊழியர்கள் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் லேசான காய்ச்சல் வருவது இயல்பு, ஆனால், மகிபால் போன்றெல்லாம் யாருக்கும் இருக்காது” எனத் தெரிவித்தார்.
ஆனால், மகிபால் சிங்கின் குடும்பத்தினர் கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால்தான் மகிபால் இறந்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மகிபால் சிங்கின் மகன் விஷால் கூறுகையில், “கரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளால்தான் என் தந்தை இறந்திருப்பார் என நம்புகிறேன். என் தந்தைக்கு ஏற்கெனவே நிமோனியா காய்ச்சல், லேசான இருமல், ஜலதோஷம் இருந்தது. ஆனால், இந்தத் தடுப்பூசி போடப்பட்டபின் என் தந்தையின் உடல்நிலை மேலும் மோசமானது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே மகிபால் சிங் உயிரிழப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ராகேஷ் சிங் உத்தரவிட்டார்.