நந்திகிராமில் இன்று நடந்த பேரணியில் மம்தா பானர்ஜி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

பிடிஐ

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்த நிலையில், நந்திகிராமில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்க மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்தான் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் ஆட்சி அமரக் காரணமாக அமைந்தது.

நந்திகிராம் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் சுவேந்து அதிகாரி. முதல்வராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றதும், சுவேந்து அதிகாரிக்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கினார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் மூத்த உறுப்பினராகவும்,செல்வாக்கு மிக்கவராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி, பாஜகவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இணைந்தார். மேலும், பல எம்எல்ஏக்களும் பாஜகவில் சுவேந்து அதிகாரி தலைமையில் இணைந்தனர்

இந்தச் சூழலில் நந்திகிராமில் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். அந்தப் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

''திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள், இங்கு பதவி சுகம் அனுபவித்தவர்கள். வேறு கட்சிக்குச் சென்றால், நான் கவலைப்படமாட்டேன். அவ்வாறு கட்சி மாறிச் சென்றவர்களால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கொள்ளையடித்த தங்களிடம் இருக்கும் பணத்தையும், சொத்துகளையும் பாதுகாக்கவே இதுபோன்ற தலைவர்கள் கட்சி மாறுகிறார்கள்.

நான் எப்போதுமே என்னுடைய சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை நந்திகிராமத்திலிருந்துதான் தொடங்குவேன். இது எனக்கு அதிர்ஷ்டமான இடம். இந்த முறை, நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடலாம் என நினைக்கிறேன். இந்தத் தொகுதிக்கு எனது பெயரைப் பரிந்துரைக்குமாறு கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஸியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இது சாத்தியமாக இருந்தால், நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளிலும் நான் போட்டியிடுவேன். ஆனால், பாஜகவிடம் இந்த மேற்கு வங்கத்தை விற்பதற்கு சிலர் முயல்கிறார்கள். அதை மட்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை, பாஜகவுக்கு என்னுடைய மாநிலத்தை விற்கவிட மாட்டேன்.

ஆனால், என் கட்சியை விட்டு விலகியவர்களுக்கு எனது வாழ்த்துகள்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT