காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்சின்’ என்ற கரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையில்தான் இருக்கிறது. மிக முக்கியமான அந்த சோதனையை கடப்பதற்கு முன்பாக, இந்த மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முழுமையாக பரிசோதனை நடைமுறைகளை முடிக்காமல் ஊசி செலுத்துவதற்கு இந்தியர்கள் ஒன்றும் எலிகள் கிடையாது. கரோனா தடுப்பு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானது என அரசாங்கம் கூறுகிறது. அப்படியென்றால், அரசு உயர் அதிகாரிகள் ஒருவர் கூட இந்த தடுப்பூசியை இதுவரை செலுத்திக் கொள்ளாதது ஏன்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அத்துடன், "வதந்தியையும் அவநம்பிக்கையையும் மக்களிடம் பரப்புவதே காங்கிரஸுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரிக்கும் தலையாய பணியாக இருக்கிறது. நன்றாக கண்களை திறந்து பாருங்கள். அரசு மருத்துவர்களும் அரசு உயரதிகாரிகளும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர்" என பதிவிட்டுள்ளார்.