ராஜஸ்தான் ஹரியாணா எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம். 
இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் போராட்டத்தில் இணையும் கேரள விவசாயிகள் 

பிடிஐ

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜஸ்தான், ஹரியாணா எல்லைக்கு அருகே நடந்து வரும் போராட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த 400 விவசாயிகள் இணைந்தனர்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராஜஸ்தான், ஹரியாணா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் தற்போது கேரளாவிலிருந்து 400 விவசாயிகள் இணைந்துள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அம்ரா ராம் கூறியதாவது:

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராஜஸ்தான் ஹரியாணா எல்லையில் 'சன்யுக்ட் கிசான் மோர்ச்சா' என்ற விவசாய அமைப்பு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தற்போது கேரளாவிலிருந்து வந்த 400 விவசாயிகளும் இணைந்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த விவசாயிகள் குழு வெள்ளிக்கிழமை ஆல்வாரின் ஷாஜகான்பூருக்கு வந்தது. பின்னர் சனிக்கிழமை காலை போராட்டத்தில் அவர்கள் இணைந்தனர்.

இங்கு நடைபெறும் போராட்டத்தில் நெடுஞ்சாலையின் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு விவசாயிகள் குவிந்துள்ளனர், இதன் காரணமாக உள்ளூர் மக்களுக்காக ஒரு சேவை பாதையும் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கடுமையான குளிர் நிலையில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இவ்வாறு சிபிம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT