தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி உத்தரபிரதேச அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு தம் அரசுப் பணி அளிக்க முடிவு செய்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் கடந்த டிசம்பர் 2018 இல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது. இதன்படி, டிசம்பர் 31 2014 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு இந்திய பிரஜையாகும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்து, கிறித்துவம், புத்தம் மற்றும் ஜைன மதத்தினருக்கும் கிடைக்கும் இந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டும் அளிக்கப்படவில்லை. இதனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழலால், அச்சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பித்த அகதிகளுக்கு உ.பி.யில் ஆளும் பாஜக தன் அரசு வேலைவாய்ப்பை அளிக்க முன்வந்துள்ளது. பாஜக ஆளும் உ.பி. அரசின் நீர்வளத்துறையில் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில், உயர் அதிகாரிகள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரையிலான பணியிடங்கள் அதிகமாகக் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான விதிமுறைகளில், சில முக்கிய மாற்றங்கள் பாஜக அரசால் செய்யப்பட உள்ளன.
முன்னதாக அடுத்த கூடவிருக்கும் பாஜக அரசின் உ.பி. கேபிண்ட் அமைச்சகக் கூட்டத்தில் அதற்கான அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து வந்தவர்களையும் பணியமர்த்த ஏதுவாக அமைய உள்ளது.
இவர்கள் இன்னும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாக இல்லாமல் போனாலும் அதற்காக விண்ணப்பித்த அகதிகளாக இருப்பது அவசியம். மேலும், இந்த அகதிகள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு உ.பி. மாநில எல்லைகளுக்குள் வசித்திருக்க வேண்டும்.
இதன்மூலம், இந்துக்கள் மட்டுமே பலன் பெறும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. உ.பி.யின் நீர்வளத்துறை விதிமுறையில் செய்யப்படும் மாற்றம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.