உலகின் மிகப்பெரிய கரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இதன்காரணமாக வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்தது.
கரோனா வைரஸ்தடுப்பூசி தயாரிக்கும் பணிகள், பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, தமிழகம் உட்படநாடு முழுவதும் 2 கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்பின், தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16-ம்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்குதொடங்கி வைத்தார். பின்னர், நாட்டு மக்களிடையே காணொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.