இந்தியா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத்தொடர்ந்து அங்கு பிரம்மாண்ட மான ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் நிதி திரட்டி ராமர் கோயில் கட்ட இந்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அரசிடம் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தோ நிதி பெறாமல், நாட்டு மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் இருந்து ரூ.10, ரூ.100, ரூ.1,000 என்ற அளவிலும் அவரவர் விருப்பத்துக்கேற்பவும் நிதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டும் பணி நேற்று தொடங்கியது. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் துணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிராஜ் மகராஜ், விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார், கோயில்கட்டுமான கமிட்டி தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் குல்பூஷண் அஹூஜா ஆகியோர் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

அப்போது, ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாயை காசோலை மூலம் நன்கொடையாக அளித்தார்.

பின்னர், விஎச்பி தலைவர் அலோக் குமார் கூறுகையில், ‘‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டின் முதல் குடிமகன். அவர் 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக கொடுத்தார். பிப்ரவரி 27-ம் தேதி வரை நன்கொடை வசூலிக்கும் பணிகள் நடக்கும்’’ என்றார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT