இந்தியா

ஆந்திராவில் களை கட்டிய சேவல் பந்தயம்: 200 கோடி ரூபாய்க்கு புரண்டது

செய்திப்பிரிவு

திருப்பதி: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, ஆந்திராவில் சேவல் பந்தயம், மஞ்சு விரட்டு, காற்றாடி போட்டிகள் களை கட்டின. இதில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சேவல் பந்தயங்களில் ரூ.200 கோடிக்கு மேல் பணம் புரண்டது.

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டும் வழக்கம் போல் களை கட்டியது. குறிப்பாக குண்டூர், கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயங்கள் போலீஸ் தடையையும் மீறி நடந்தன. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சேவல் பந்தயங்களில் சுமார் ரூ.200 கோடி வரை பந்தயங்கள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விடிய விடிய நடந்த சேவல் பந்தயங்களில் பணம் மட்டுமின்றி, கார்கள், பைக்குகள், வீடுகள், வீட்டு மனை பட்டாக்கள், நில பட்டாக்களும் கைமாறின.

எம்.பி.க்களும், எம்எல்ஏ.க்களும் சேவல் பந்தயங்களை போட்டி போட்டு தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொள்பவர்கள் மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் கடந்த 3 நாட்களாக பிரியாணியுடன் விருந்து பரிமாறப்பட்டது. சேவலின் கால்களில் கத்தி கட்ட கூடாது எனும் நிபந்தனை இருந்தாலும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. போலீஸாரின் உத்தரவுகள் காற்றில் பறந்தன. கரோனா நிபந்தனைகளும் பின்பற்றப்படவில்லை. தமிழக எல்லையான சித்தூர் மாவட்டத்தில் மட்டும் மஞ்சு விரட்டு பொங்கல் பண்டிகைக்கு நடத்தப்படுவது வழக்கம். குப்பம், நகரி, சந்திரகிரி, பீலேரு ஆகிய தொகுதிகளில் மஞ்சு விரட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போலீஸாரின் நிபந்தனைகளை மீறி மாடுகளை அடித்து விரட்டி, மஞ்சு விரட்டு நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT