அன்னா ஹசாரே, பிரதமர் மோடி: கோப்புப்படம். 
இந்தியா

விவசாயிகளுக்காக கடைசி உண்ணாவிரதப் போராட்டம்: பிரதமர் மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம்

பிடிஐ

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்காக கடைசி உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போகிறேன் என பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 8 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

இதனிடையே சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கடந்த மாதம் 14-ம் தேதி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு எழுதிய கடிதத்தில், ''விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சுயாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஜனவரி மாத இறுதியில் எனது கடைசி உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன்” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், அந்தக் கடிதத்தில் எப்போது தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப்போகிறேன் எனத் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து அன்ன ஹசாரே நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ஜனநாயகத்தின் மதிப்புகளின்படி புதிய வேளாண் சட்டங்கள் இல்லை. சட்டத்தைக் கொண்டுவரும்போது, மக்களின் கருத்துகளும், ஒப்புதல்களும் அவசியம்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் எனது கடைசி உண்ணாவிரதத்தை அவர்களுக்காக நடத்தப்போகிறேன். இது தொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக இதுவரை நான் 5 முறை மத்திய அரசைத் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. ஆதலால், நான் கடைசி முயற்சியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டேன்.

ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி இதுவரை 4 கடிதங்கள் மத்திய அரசு்கு எழுதிவிட்டேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை.

ஊழலுக்கு எதிராக நான் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தியபோது, இதே பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்னைப் பாராட்டினார்கள், புகழ்ந்தார்கள். ஆனால், இப்போது கோரிக்கை தொடர்பாக எழுத்துபூர்வ உறுதியளித்தாலும் அதை நிறைவு செய்யமுடியவில்லை.

உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த தடை விதித்திருப்பதே தார்மீக ரீதியில் மத்திய அரசுக்குத் தோல்விதான். அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைப் பாராட்டுகிறேன்.

விவசாயிகள் அஹிம்சை முறையில் போராடி வருவதால்தான், மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தப் போராட்டம் வன்முறையாக மாறினால், அரசு போராட்டத்தையே நசுக்கிவிடும்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக நடக்கும் போராட்டம் இப்போதைக்கு முடிவது போல் எனக்குத் தெரியவில்லை. விவசாயிகளும், மத்திய அரசும் தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்''.

இவ்வாறு அன்னா ஹசாரே தெரிவித்தார்.

SCROLL FOR NEXT